Translate this blog to any language

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உட் குழிந்த குறைகள் !


குறை காணும் கண்கள்.....

உனது பார்வையில் நானும்
எனது பார்வையில் நீயுமாய்...!

அட !
குறை என்பதுதான் என்ன?

எனது இயலாமையை

உனது 'இயலுமையால்'
நிரவும் முயற்சியின்
பதட்டம் தானே !

உண்மையில்
என் குறை என்பதும்
உன் குறை என்பதும்
பார்வை கோண மாறுபாட்டில்
ஒளிரும்
'ஒரு-பரிமாண'
உரு வெளி பிம்பமே!

மேலும்
நீ காணும் எனது
'உட் குழிந்த' குறைகள்
'வெளிக் குவிந்த' நிறைகளாக
வேறொரு கோணத்தில்
வேற்றாரால் உணரப்படும் !

உனதும் அவ்வாறே !

ஆம்!
அறிவு காணும் குறைகள் என்பன
"ஒரு-பரிமாண"
தோற்ற மாயையே !

அன்பில் உணரும்
உச்ச உண்மையே
"பல்-பரிமாண"
வாழ்வின் இரகசியம் !

-மோகன் பால்கி

Me - A fragment of Nature! நான் இயற்கையின் கூறு!


நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை

இயற்கையின் அடையாளம்

ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

Life - The Great Master ! வாழ்வு ஒரு ஞானாசிரியன் !

வாழ்வு ஒரு ஞானாசிரியன்!

அது
நூலகங்களில்
அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற
ஏராளமான புத்தகங்கள்
கற்றுத் தருவதைக் காட்டிலும்
அதிகமானதை
நமக்குக் கற்றுத் தருகிறது!

ஆயினும்
வாழ்வின் படிப்பினைகளை
நாம் நம்பத் தயாரில்லை!

மேலும்
உண்மைகளை விட
நாம் பொய்களையே
அதிகம் நேசிக்கிறோம் !

ஏனெனில்
பொய்மை எப்போதுமே
அழகு மிக்கது போன்றும்
நம்பிக்கையூட்டுவது போன்றும்
தோற்றம் அளிக்கிறது !

- மோகன் பால்கி

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

முதலில் சரியான வாழ்வு!

என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!

ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!

ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்

மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!

- மோகன் பால்கி

வெறும் சப்தம் !

எனது சில நூறு சொற்கள்
ஏதோ ஒரு மனிதனை
உள்ளும் புறமும் மாற்றி

அவனை மகிழ்வித்து
அடுத்தவர்களையும்
மகிழ்விக்கும் எனில்

அதற்காக நான்
ஆயிரம் சொற்களைப்
பேச தயார்!

அல்லாமல்

மனித மனங்களைப்
பண்படுத்தாத
எந்த ஒரு ஆடம்பரப் பேச்சும்

வெறும் சப்தமும்
சுய தம்பட்டமுமே ஆகும்!

- மோகன் பால்கி

Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!

வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!

ஏன் என்றால்
நான்
பூமியில் பிறந்த
மனிதன்!

- மோகன் பால்கி

வெள்ளி, 10 அக்டோபர், 2008

Time - Shore "காலக் கடற்கரை"



கிளிஞ்சல்கள் திரட்டி
மணல் வீடு கட்டி
வண்ணப் பட்டம்
பறக்க விடுகின்ற
அறியாச் சிறுசுகள்!

கிளிஞ்சல்கள் பொறுக்கி
கைப்பொருள் செய்யவும்
'சிறுவீடு ' கட்டி
'பட்டங்கள்' தரவும்
முனைந்து நிற்கும்
மெய்ஞான பெருசுகள்!

வாழ்வின் அடிநாதம்
வார்த்தைகளில் இல்லை!
வண்ண - வடிவ
அரு - உருவில் இல்லை!
வாழ்க்கை என்பது
வாழ்ந்தவன் அனுபவம்!

விரி பிரபஞ்சம்
விளக்கமானது - விளக்கமற்றது!
காலநதியின்
கணக்கறு மணலாய்
கோடி சூரியன்
மின்னி மறைந்தன!
எண்ணறு புத்தர்கள்
இனியும் வருவர்!

விளக்க முடியாததை....
விளக்க முற்படும்....
விளங்காச் சிறுவராய் !!

- மோகன் பால்கி