Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

Rolling Stocks ! இரயில் பெட்டிகள்



எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!

அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;

எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Eternal Slaves ! நிரந்தர அடிமைகள் !


நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்....
நிரந்தர அடிமைகளாய் நாம்!

ஐந்து முப்பதுக்கு எழுந்து
ஆறேகாலுக்குள் ஆயத்தமாகி
ஆறு இருபத்தைந்து
பேருந்து பிடித்து-
ஏழு பத்து ரயிலைப் பிடித்து
எட்டு நாற்பது பேருந்தை
மீண்டும் ஓடிப் பிடித்து
தொங்கியவாறு பயணம் செய்து
ஒன்பது மணிக்குள்
அலுவலகப் பதிவேட்டில்
கையெழுத்திட வேண்டும்!

இதற்குள் எல்லாம்
சரியாக
நடக்க வேண்டும்!

மீண்டும் ஐந்து மணிக்கே
அலுவலகம் முடிந்தாலும்
மேலே இருப்பவனின்
மெச்சுதல் வேண்டி
ஆறுக்கோ ஏழுக்கோ கிளம்பி
ஒன்பதுக்கோ பத்துக்கோ
வீட்டைச் சேர்கையில்
புறநகர் முழுதும்
மொத்தமாய் தூங்கும் !

வீட்டுப் பாடங்களை
முடித்து விட்டு
அப்பாவின் முகத்தைக் காண
ஆவலாய் காத்திருந்த
குழந்தைகள்
அரைத் தூக்கத்தில்
அரை குறையாய்ப் பேசும்!

அவற்றிற்கும்
அதனதன் கவலை!

காலையில் எழுந்து
மிச்ச சொச்ச பாடங்களை
முடித்து விட்டு
பள்ளிக்கு கிளம்ப வேண்டுமே!

இப்படியாக ஒவ்வொரு நாளும்...

நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்
நிரந்தர
அடிமைகளாய் நாம்!

"இந்தக் கணத்தில்"..1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

தாமரை அழகில்லை!


சூரியன் எழுமுன்
எழுந்து போய்
தாமரை மலர்வதைக் காண
பேராவல் எனக்கு !

நகர வாழக்கையில்
அதற்கு எங்கே போவது?

இதோ!

அதை விடப் பேரழகாய்
என் குழந்தை
காலையில்
கண் மலர்ந்தாள்!

-"இந்தக் கணத்தில்".... - 1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

Meditation "Happens" - தியானம் - "நிகழ்கிறது"!


நான் தியானம் செய்கிறேன்...

என்று எவராவது சொன்னால்
அது மிகவும் தவறான வார்த்தையாகும்!
நம்மை விட பிரம்மாண்டமானதை
நாம் எப்படி செய்ய முடியும்?

அது கிட்டத்தட்ட

"நான் காற்று செய்யப் போகிறேன்"
"நான் தூக்கம் செய்யப் போகிறேன்"
என்பதைப் போன்ற அபத்தமாகும்!

தூக்கத்தை நம்மால் செய்ய முடியாது;
அது நம் உழைப்பின் களைப்பினால்
பரிசாகக் கிடைப்பது!
அதனால்தான் உடல் உழைப்பற்றவர்களால்
சரிவரத் தூங்க முடிவதில்லை!

தூக்கம் என்பது செயல் அன்று!
அது
உழைப்பின் பயன் ஆகும்!

மரக் கன்றுகள் நடுவது நமது செயல்;
அதில் பழம் வருவதோ வராததோ
அதன் பயன் ஆகும்!

நாம் மரக் கன்றுகள் நடலாம் - அதில்
நம்மால் பழம் வரவழைக்க இயலாது!

நாம் தியானத்துக்காக அமரலாம் - ஆனால்
தியானத்தை நம்மால் செய்ய இயலாது!

உண்மை என்னவென்றால்,

அழுக்குகள் நீங்கியவிடத்து
சுத்தம் தெரிவதைப் போன்று
மன மாசுகள் நீங்கியவிடத்து
தியானம் நிகழ்கிறது!

-"வாழ்வும் தியானமும் ".... - 2004
யோஜென் பதிப்பகம்
-மோகன் பால்கி

எது பேராண்மை?



சுதந்திரம் - இறைவன்
இவற்றில்
இரண்டில் ஒன்றைத்
தேர்ந்தெடுக்கும்படி
என்னிடம் சொன்னால்
நான் முதலில்
சுதந்திரத்தையே தேர்ந்தெடுப்பேன்!

ஏனெனில்
சுதந்திர உணர்வற்ற
குறுகிய மனம்
எவ்வாறு
எல்லைகளற்று விரிந்த
இறைவனை அறியும்?

சுதந்திரம் என்பது
நடு-நிலைப் பார்வை!

அனைத்து வித
சித்தாந்த
கூடாரங்களில் இருந்தும்
வெளியேறி

வெட்டவெளியில்
தனியனாய் நின்று
உண்மையை தரிசிக்கும் பேறு!

பொய்மைக் கோட்டைகளைப்
பொடிப்பொடியாக்கும்
பேராண்மை!

-மோகன் பால்கி

அழிவற்ற பிரம்மம்!


உதிப்பது மறைவது போல
நம் விழிகளுக்கு
தோன்றினாலும்
நமது உயிர்-சூரியனோ
ஒரு நாளும் மறைந்ததில்லை !

"நீ - நான்" கூட அவ்வாறே!

இருப்பது அழிவ துண்டா?


-மோகன் பால்கி

ஐயனே ஒளியே - ஓமெனும் நாதமே !

ன்னமும் டையும் ல்லமும் ந்துயிர்
காற்றினை தினை ந்தையே ழையென்
யனேளியே மெனும்நாதமே ஒளவியம் தீர்த்தாட்
கொண்டனை அக துன் அருளே !

*******

முத்தொழில் மூலவர் அத்தொழில் முதல்வ
எத்தொழில் ஏவிட 'இத்தைப்" படைத்தையோ
அத்தொழில் மேவிட வித்தகம் செய்திட
சத்தெனக் கருள்க ஆள்க !

*******

கருவாய் துவங்கி எருவாய் வரையும்
உருவாய் அருவாய் திருமால் மறையே
தருவாய் திருவாய் தருவன வெல்லாம்
நிறைவாய் எம்பணி செய்திடு மாறே !

********

சுடலையின் நடனம் இடுகிற சங்கர
உடலையின் உள்ளொளி சிவசிவ சங்கர
கடலுறை விடமும் பகையும் அங்கற
பிறவாத் தவநிலை சிவசிவ நமசிவ!

********

அன்புரு அன்னைஎந்தை ஆடலின் கூடலண்டம்
பின்புருக்கொண்டும் விண்டும் அகண்டிடுமின்னு மண்டம்
இன்மையில் இருப்பும்தன்மைக் காற்றினில்நெருப்பும் வைத்த
வன்மைஅவ் இறைவ வாழி!

-மோகன் பால்கி